இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய ½ மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இந்த தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன. இதைப்போல ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணிகள் நேற்று 6-வது நாளை எட்டிய போதும், மாயமான விமானம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே தேடும் பணிகளில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் மாயமான விமானம் தொடர்பாக தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என இந்திய விமான படையின் ஏர் மார்ஷல் ஆர்.டி. மாத்தூர் அறிவித்துள்ளார்.