புதுடெல்லி:
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.
2018 - 2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நாளை தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும்.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. முதல் பிரிவு 8 அமர்வுகளாகவும், 2-வது பிரிவு 23 அமர்வுகள் கொண்டதாகவும் நடைபெறும். கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். அனைத்து பிரச்னைகளும் விவாதிக்க முயற்சிக்கப்படும். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார். #tamilnews