செய்திகள்

எல்லாம் எனது தவறாக உணர்கிறேன்- வார்னர் மனைவி உருக்கம்

ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று உணர்வதாக அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தடைவிதிக்கப்பட்டதால் கனத்த இதயத்துடன் தென்ஆப்பிரிக்காவில் இருந்து சிட்னி வந்த வார்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘நடந்த தவறுக்கு தன்னுடைய பங்கும் இருக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கிறேன். ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டேன்’’ என்று கண்ணீருடன் வார்னர் மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல், ‘‘இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடமாட்டேன்’’ என்றும் தெரிவித்தார். இந்த வார்த்தையை கேட்டு அவரின் மனைவி கேண்டிஸ் கண்ணீர் விட்டார்.

இந்நிலையில், வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘சண்டே டெலிகிராப்’ நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘‘பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம் என உணர்கிறேன். அந்த குற்ற உணர்ச்சி என்னை கொன்று கொண்டிருக்கிறது. முற்றிலுமாக கொன்றுவிட்டது.

எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்பு கோரவில்லை. அவரை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கவில்லை. அவர் என்னையும், எங்கள் குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார். எனது கணவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்தபோது, படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்து நானும், எனது குழந்தைகளும் வேதனை அடைந்தோம். இது இதயத்தை நொறுக்குவதாக இருக்கும்’’ என்றார்.

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது வார்னருக்கும் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் டிரஸ்ஸிங் அறை வரை நீடித்தது. வார்னரின் முன்னாள் காதலரான நியூசிலாந்து ரக்பி வீரர் சோனி பில் வில்லியம்ஸ் உடன் தனது மனைவியை இணைத்து பேசியதால்தான் வார்னர் மோதலில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது.