போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 32 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 5-வது முறையாக தங்கப்பந்து (பலோன் டி'ஆர்) விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தற்போதைய தலைமுறையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் தான் சிறந்த வீரர் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். இதற்கு ஆதராவான கருத்துக்களும், எதிர்ப்பு கருத்துக்களும் வருகின்றன.
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘வேறு எந்த வீரரும் என்னைப் பொன்ற தனிப்பட்ட விருதுகளை அதிக அளவில் பெற்றது கிடையாது. நான் இந்த பலோன் டி'ஆர் விருதை மட்டும் பற்றி பேசவில்லை. எல்லோருடைய முக்கியத்துவத்திற்கும் நான் மதிப்பு அளிக்கிறேன். ஆனால், என்னை விட சிறந்த வீரராக யாரையும் நான் பார்க்கவில்லை.’’ என்றார்.