செய்திகள்

சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: ரவிசாஸ்திரி

‘சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஒரு ஆண்டாக இருந்த அனில் கும்பிளே, கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பதவியில் இருந்து கடந்த மாதம் 20-ந் தேதி விலகினார். புதிய பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான கங்குலி, தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை மும்பையில் நடத்தினார்கள்.

நேர்காணல் முடிந்ததும் பயிற்சியாளர் யார்? என்று அறிவிக்கப்படாததால் ஷேவாக் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாயின. சிறிய இழுபறிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் இரவு புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட வெளிநாட்டு தொடர்களுக்கு முன்னாள் கேப்டன் டிராவிட் பேட்டிங் ஆலோசகராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று செயல்பட இருக்கிறார்.

இந்த நிலையில் லண்டன் சென்று இருக்கும் ரவிசாஸ்திரி டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இதற்கு முன்பு இருந்த இந்திய அணிகளை விட டெஸ்ட் போட்டியில் தற்போதைய இந்திய அணி தான் மிகவும் சிறப்பானதாகும். இந்திய அணியுடன் இணைந்து மீண்டும் பயணிக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த சூழலிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு பொருத்தமான வயதுடன் உள்ளனர்.

நான் எப்பொழுதும் சவாலை விரும்பி எதிர்கொள்பவன். இந்திய அணியினருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். மேகமூட்டமாக இருக்கும் தருணத்தில் நடைபெறும் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக பேட்டிங் செய்வது என்பது சவால் நிறைந்ததாகும். நான் அத்தகைய சவாலை சந்தித்து இருக்கிறேன். அதுபோல் இதுவும் இன்னொரு சவாலாகும். நானும், கங்குலியும் முன்னாள் கேப்டன்கள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் இருந்தாலும், இருவருக்கும் இடையில் பரஸ்பர மரியாதை உண்டு.