தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒன்றாக இணைந்து சாலையை தூய்மை செய்து உலக சாதனை படைத்தனர்.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் கே.சி.சந்திரசேகர் ராவ். தூய்மை ஐதராபாத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தூய்மை ஐதராபாத் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பள்ளி மாணவர்களை கொண்டு நகரை தூய்மைப்படுத்த முடிவானது.
இதற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். அவர்கள ஐதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஐதராபாத் நகரை 40 பகுதியாக பிரித்து, அங்கு மாணவர்கள் தயாராக இருந்தனர். ஒரே நேரத்தில் சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஈடுபட்டனர். இதனால் சாலையை தூய்மைப்படுத்த 3 நிமிடங்களே ஆனது.
இந்த தூய்மை நிகழ்ச்சியில் மாநில உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி, துணை முதல் மந்திரி முகமது அலி, தொழில்நுட்ப துறை மந்திரி ராமாராவ் மற்றும் பெருநகர ஐதராபாத் மாநகராட்சி ஆணையர் ஜனார்த்தன் ரெட்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக ராமாராவ் கூறுகையில், முதல் மந்திரியின் தூய்மை ஐதராபாத் திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களை இதில் ஈடுபடுத்தியுள்ளோம். திட்டத்தைசெயல்படுத்துவதற்கு முன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த திட்டத்துக்கு உதவி செய்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.