லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தை பெற்றுதராத கோபத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் கபில் குமார், டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமல், டெல்லியில் ரெயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டெபிளாக பணியாற்றி வருகிறார். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முசாபர்நகரில் உள்ள கோமலின் வீட்டுக்கு சென்ற கபில் குமார், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கோமல் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து காயமடைந்த கோமலை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது நிலைமை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோமலின் பெற்றோர் கூறுகையில், கபில் குமார் நீண்ட காலமாக வரதட்சனை கொடுமை செய்து வந்ததாகவும், கோமலுக்கு பெண் குழந்தை பிறந்ததினால் மேலும் கோபமடைந்த அவர், கோமலை தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்ததால் அவரிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கபில் குமாரை தேடி வருகின்றனர்.