செய்திகள்

கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருவெறும்பூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மருதராஜ். இவரது மனைவி சரிதா (36) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 

மருதராஜ் துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்றும் இரவு மருதராஜ் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை சரிதா தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மருதராஜ், சரிதாவை தாக்கியதாக கூறபடுகிறது. பின்னர் மருதராஜ் வெளியே சென்று விட்டார். 

இதனால் மனமுடைந்த சரிதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். வெப்பம் தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சரிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து மருதராஜிடம் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.