கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம். 
செய்திகள்

சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு கணவர் ஓட்டம்

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு கணவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சிங்காநல்லூர்:

நெல்லையை சேர்ந்தவர் சூர்யா (வயது 26). இவரது மனைவி ஜெனிதா மேரி (24). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா வேலை தேடி குடும்பத்துடன் கோவை வந்தார். கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சூர்யா குடும்பத்துடன் ஊருக்கு செல்வதற்காக கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த நெல்லை செல்லும் பஸ்சில் ஏறினார். மனைவி, குழந்தைகளுடன் பஸ்சில் அமர்ந்திருந்தபோது பஸ்புறப்பட தயாரானது.

அப்போது கடைக்கு சென்று வருவதாக சூர்யா கூறி பஸ்சில் இருந்து இறங்கிச்சென்றார். பஸ் புறப்பட தொடங்கிய பின்னரும் அவர் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிதா மேரி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினார். கணவரை கடை மற்றும் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து குழந்தைகளுடன் பஸ் நிலையத்தில் அழுதுகொண்டிருந்தார். இதனைப்பார்த்த பயணி மற்றும் பொதுமக்கள் விபரம் கேட்டனர். கணவர் மாயமானது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பஸ் நிலையத்துக்கு வந்து அங்கு தவித்த ஜெனிதா மேரி மற்றும் குழந்தைகளை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு உணவு, குடி நீர் கொடுத்தனர். நெல்லைக்கு செல்வதாக இருந்தால் பஸ் டிக்கெட் எடுத்து தருகிறோம் என்று போலீசார் கூறினர். ஆனால் தனது கணவர் எங்களை பஸ் நிலையத்தில் தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்து விட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டார்.

இதனையடுத்து ஜெனிதா மேரி மற்றும் அவரது குழந்தைகளை அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குடும்பத்தை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்த சூர்யாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT