இடி 
செய்திகள்

திண்டுக்கல் அருகே சூறாவளி காற்றுடன் மழை- இடி தாக்கி பெண் பலி

திண்டுக்கல் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்தது. இடி தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் வெயில் கொடுமையால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வானில் கரு மேகங்கள் திரண்டன. பின்பு இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மரங்களும் வேரோடு சாய்ந்தன.

கொடைரோடு அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த சூரிய ஒளி மின்சார தகடுகள் உடைந்து சேதமடைந்தன. இதே போல் மரங்களும் சூறைக்காற்றுக்கு சாய்ந்தன.

திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சிக்குட்பட்ட கொல்ராம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது மனைவி லட்சுமி (வயது 38). இவர் வீட்டின் அருகே உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார்.அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.

இதனால் லட்சுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராம்லட்சுமி (35), அமுதா (40 )ஆகிய 3 பேரும் புளிய மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயமடைந்த ராம்லட்சுமி, அமுதா ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெப்பம் நிலவியது. இந்த நிலையில் சீசனை வரவேற்கும் விதமாக அவ்வப்போது கோடை மழை பொழிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. வருடந்தோறும் சீசன் மழை மற்றும் குளிர்ந்த சீதோ‌ஷண சூழ்நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள். ஆனால் தற்போது சுற்றுலா பயணிகள் இல்லாமல் சுற்றுலா தலங்களில் மழை மட்டும் பெய்து வருகிறது. மேலும் கொடைக்கானல் நகர் பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று அரை மணி நேரம் மற்றும் இன்று அதிகாலையிலும் இப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தினந்தோறும் மழை பொழிந்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட தவசிமடை, விராலிப்பட்டி, வடகாட்டுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வீட்டின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்துள்ளது. அந்த பகுதியில் ஏராளமான மின் கம்பங்களும் சேதமடைந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேமடைந்துள்ளது. இதனால் நேற்று மாலை முதல் அப்பகுதியில் மின் சப்ளை தடைபட்டுள்ளது. வீடுகளின் மேற்கூரை பெயர்ந்ததில் தவசிமடையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் மெர்லி (வயது 10) என்ற சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தவசிமடை ஊராட்சி மன்ற தலைவர் எலிசபெத் ஹெலன் ஜான்சிராணி, துணைத் தலைவர் ரோசி ஆரோக்கிய மேரி, வி.ஏ.ஓ. திருவருட்செல்வன், ஊராட்சி செயலர் தங்கவேல் ஆகியோர் அந்த பகுதியை பார்வையிட்டனர்.

இது குறித்து பாதிப்படைந்தவர்கள் கூறும் போது, ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நேற்று சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகள் சேதமடைந்து விட்டது. தற்போதுள்ள நிலையில் மூலப்பொருட்கள் வாங்கி வீடுகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

எனவே எங்களுக்கு தங்குவதற்கும், வாழ் வாதாரத்திற்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கூறினார்கள்.