செய்திகள்

அமெரிக்கா: ஹார்வே புயலினால் இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலி

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய ‘ஹார்வே’ புயலினால் இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை மலர்

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் தாக்கியுள்ளது. அந்த நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதுவரை புயல், வெள்ளத்தில் சிக்கி இந்திய மாணவன் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று அங்குள்ள பிரையான் ஏரியில் ஆனந்தமாக நீச்சலடித்து குளிக்க சென்ற ஒரு மாணவரும், மாணவியும் மூழ்கினர். இது குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு போராடி வந்த சாலினி மற்றும் நிக்கில் பட்டியாவை மீட்டு அங்குள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

இந்நிலையில் மாணவன் நிக்கில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தான். மாணவி சாலினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நகரின் பல்வேறு பகுதியில் வெள்ளத்தினால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். மக்கள் வெள்ளத்தில் காணாமல் போய் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 3500க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெக்சாஸ் மாகாணத்தை நேற்று பார்வையிட்டார். அதே போல் ஆஸ்டின் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டிரம்ப் சனிக்கிழமை பார்வையிட போவதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய 10 மில்லியன் அமெரிக்க டாலரை நிவாரணமாக வழங்கப் போவதாக அந்நாட்டு தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.