புதுடெல்லி:
மருத்துவ படிப்புகளுகாக தேசிய அளவில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வான நீட் தேர்வு குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்தவண்ணம் உள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழியில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆங்கில மொழி கேள்வித்தாளைவிட தமிழ் மொழியில் அமைந்த கேள்வித்தாள் எளிமையாக இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் புகார் அளித்தனர். அதில், நீட் தேர்வில் பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில கேள்வித்தாள்களில் இருந்து நிறைய வேறுபட்டிருந்ததாகவும், கடினமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகார்களை ஆராய்ந்த மனிதவள அமைச்சகம், இதுகுறித்து சி.பி.எஸ்.இ. விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் குறித்து விரைவில் விளக்கம் அளிக்கும்படி சி.பி.எஸ்.இ.-யிடம் கூறியிருப்பதாக மனிதவள அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் அதிகாரிகள் செய்த கெடுபிடிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.