திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் திருவண்ணாமலையில் உள்ள இடும்பனார் கோவில், இளையனார் கோவில் இடங்களை பார்வையிட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவண்ணாமலை இடும்பனார், இளையனார் கோவில் இடங்களை அதிகாரிகள் லஞ்சம் பெற்று பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இந்த கோவில் இடங்களை மீட்காவிட்டால் தை மாதம் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் 38 ஆயிரத்து 165 கோவில்கள் உள்ளதாக கணக்கில் உள்ளது. ஆனால் 10 ஆயிரம் கோவில்கள் காணாமல் போய்விட்டன. திராவிட கட்சிகள் கோவில்களை ஆக்கிரமித்ததால் பல கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் ரூ.3,600 கோடி கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கோவில்களுக்கு சொந்தமான கடைகளில் குறைந்த அளவு வாடகை வசூலிப்பதால் தமிழக முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிர்வாகத்தை புரிந்து கொள்வதற்கும், பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மாவட்ட நிர்வாகத்திடம் கவர்னர் கலந்தாலோசித்து வருவது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிகார வரம்புக்கு உட்பட்டே கவர்னர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதனை மக்கள் முகம் சுளிக்கும் வகையில் தி.மு.க.விமர்சனம் செய்வதும், கருப்பு கொடி காட்டுவதும் சிறுபிள்ளை தனமாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி வருகிறேன்.
காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்வதற்கு 5¾ கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு குண்டு மணியளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிலை செய்ததில் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
கோவில் கும்பாபிஷேகத்திற்கு செலவு என கூறி பல பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி மட்டுமே கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைக்கு ரசீதும் போடப்படுவதில்லை. அந்த அளவுக்கு முறைகேடு நடந்து வருகிறது.
தொடர்ந்து தமிழக அரசு அறநிலையத்துறை கோவில்களை அழிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு நிர்வாக தகுதியின்மையே காரணம்.
அதனால் கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். இந்துகளுக்கு மத சுதந்திரம் இல்லை. வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிப்பதுதான் மத சுதந்திரம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அதன் கட்சி நிர்வாகிகளையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களால் இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை விரைவில் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரும். நதிகள் மாநில பட்டியலில் இருக்கின்றது.
பொதுப்பட்டியலில் அவை கொண்டு வரப்பட்டால் தான் மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிகளை இணைக்க முடியும். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள், எரிவாயு இணைப்பு, வீடு கட்டும் திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்.