செய்திகள்

திண்டுக்கல் - வடமதுரையில் எச்.ராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- உருவ பொம்மை எரிப்பு

பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த எச்.ராஜாவுக்கு எதிராக திண்டுக்கல், வடமதுரையில் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடைபெற்றது.

திண்டுக்கல்:

தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் தி.மு.க., திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

அதன் பின்னர் பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சமூக மோதல்களை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அவர் மீது பா.ஜ.க. தலைமை உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

வடமதுரை பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகி மணிகண்டன் மற்றும் ஏராளமானோர் எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியபடி அவரது உருவ படத்தை எரிக்க முயன்றனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

மேலும் உருவ படத்தை எரிக்க முயன்ற 10 பேரை கைது செய்தனர். தொடர்ந்து போராட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களால் பா.ஜ.க. அலுவலகத்துக்கும் பெரியார் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT