விகாஸ் துபே வழக்கு 
செய்திகள்

விகாஸ் துபே ஜாமீன் பெற்றது எப்படி?: இதுதான் முக்கியம் என விசாரணைக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

8 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே ஜாமீன் பெற்றது எப்படி? என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்திற்கு வரும் வழியில் தப்பி ஓட முயற்சி செய்யும்போது என்கவுன்டர் செய்யப்பட்டார். இது வேண்மென்றே செய்யப்பட்ட என்கவுன்டர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கொலை உள்பட 65 கிரிமினல் வழக்குகள் பின்னணியாக கொண்ட விகாஸ் துபே ஜெயிலில் இருந்து ஜாமீன் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஜாமீன் பெற்றது குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி பாப்தே தெரிவிக்கையில் ‘‘விசாரணைக்கு விகாஸ் துபே எப்படி ஜாமீன் பெற்றார் என்பது மிகமிக முக்கியமானது. அதுதான் இந்த விளைவுக்கு வழிவகுத்தது’’ என்றார். மேலும், பல வருடங்கள் விகாஸ் துபா ஜாமீனில் வெளியே வந்துள்ளது படுபயங்கரமானது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம் காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3-ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு போலீசார் சென்றிருந்தபோது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். 

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்தான். 

விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்றபோது அவனை பார்த்த கடைக்காரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.

கான்பூரை நெருங்கியபோது பாதுகாப்பிற்காக வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.