சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீ (23).
கடந்த 12-ந்தேதி சுபஸ்ரீ துரைப்பாக்கத்தில் உள்ள கம்பெனியில் வேலை முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டியில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.
இதில் ஸ்கூட்டியில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சுபஸ்ரீ உயிர் இழப்புக்கு காரணமான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஜெயகோபாலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். பள்ளிக்கரணை போலீசாரும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஜெயகோபால் தலைமறைவானார்.
பரங்கிமலை போக்குவரத்து போலீசாரும், பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு போலீசாரும் ஜெயகோபாலை கைது செய்வதில் தீவிரம் காட்டினர். அவரை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
அவரது செல்போன் டிஜிட்டல் பணபரிமாற்றம் ஆகியவற்றை போலீசார் கண்காணித்தனர். நேற்று அவர் திருச்சி, தர்மபுரி, ஒகேனக்கல் பகுதிகளுக்கு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து 2 தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஜெயகோபால் தங்கி இருப்பது போலீஸ் கண்காணிப்பில் உறுதியானது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று விடுதியை சுற்றிவளைத்து ஜெயகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்துச் வந்தனர்.
தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் 16 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயகோபால் செல்போனை போலீசார் கண்காணித்தபோது, அவர் ஒகேனக்கலில் உள்ள தனது நண்பர் ரஜினி என்பவருடன் பேசியது தெரிய வந்தது. உடனே போலீசார் ஒகேனக்கல் சென்று ரஜினியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ஜெயகோபால் தேன்கனிகோட்டையில் உள்ள ஒரு விடுதியில் இருப்பதாக கூறினார். அந்த விடுதியின் பெயரையும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜெயகோபால் தேன்கனிகோட்டையில் உள்ள தனியார் விடுதியை காலி செய்வதற்காக டெபிட்கார்டு மூலம் பணம் செலுத்தினார். அவரது டிஜிட்டல் பணபரிமாற்றத்தை கண்காணித்து போலீசார் அவர் அங்கு இருப்பதை உறுதி செய்து அந்த விடுதியை சுற்றி வளைத்தனர்.
விடுதியில் இருந்து ஜெயகோபால் வெளியே வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.
டிஜிட்டல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்தது தொடர்பாக பேனர் கட்டியவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர். அந்த பகுதியை சேர்ந்த பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோர்தான் சாலையில் பேனர் கட்டினார்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பேனர் கட்டிய 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.