லக்னோ:
சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கர் சிலைகள் பெரும்பாலும் நீல நிறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அம்பேத்கரின் சிந்தாத்தங்களை கொண்டு தொடங்கப்பட்ட கட்சிகளும் நீல நிறத்தை தங்களது கொடிகளில் பிரதானப்படுத்தியிருக்கும். அம்பேத்கருக்கு நீல நிறம் பிடித்தமான நிறம்தான். ஆனால், அதனையும் தாண்டி ஒரு காரணம் உள்ளது.
பரந்து விரிந்த வானம் போன்று நமது சிந்தனைகள் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தவர். வானம் நீல நிறம்தானே, அதனால், நீலம் அவருக்கு இன்னமும் பிடித்தமானதாக ஆனது என்கிறார் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி தராபுரி. 1942-ம் ஆண்டு பட்டியலின மக்களுக்காக அவர் கூட்டமைப்பு தொடங்கிய போது அமைப்பின் கொடி நீல நிறத்திலும், நடுவில் அசோக சக்கரம் வருமாறும் அமைக்கப்பட்டது.
பின்னர், 1956-ம் ஆண்டு மேற்கண்ட கூட்டமைப்பு கலைக்கப்பட்டு இந்திய குடியரசு கட்சி உருவான போது அக்கட்சியின் கொடியாக அசோக சக்கரத்துடன் கூடிய நீல நிற கொடி அறிவிக்கப்பட்டது.
இன்றும், எளிய மக்களால் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைகளில் நீல நிற கோட் அணிந்து அவர் ஒரு கையில் அரசியல் சாசனத்துடனும், மறு கையை முன்னே நீட்டியவாறு முன்னோக்கி செல்லுங்கள் என அனைவருக்குமான வழியை காட்டுகிறார். #Ambedkar #TamilNews