அய்யம்பேட்டை:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பசுபதிகோவில் புது நகரை சேர்ந்தவர் ஜெயசேவியர் (30). இவர் அய்யம்பேட்டை சாவடி பஜாரில் டீக்கடை வைத்துள்ளார். இவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக வீட்டின் கீழ் தளத்தில் பெயிண்டிங், எலக்ட்ரிக்கல் வேலை நடைபெற்றது. மின்சாதன பொருட்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் கீழ் தளத்தில் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.
இதனால் ஜெயசேவியர் இரவு தனது குடும்பத்துடன் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினார். காலையில் கீழே இறங்கி வந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவும் திறந்து இருந்தது.
அதில் வைக்கப்பட்டு இருந்த தாலிசெயின், வளையல், நெக்லஸ் உள்ளிட்ட 16 பவுன் நகைகளை கொள்ளை போய் இருந்தது.இது குறித்து ஜெயசேவியர் அய்யம் பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் தஞ்சையில் இருந்து சென்ற கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.