செய்திகள்

கலவரத்தை தூண்ட 1.25 கோடி ரூபாய் செலவு செய்த ஹனிபிரீத்: காவல்துறை தகவல்

கற்பழிப்பு வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், வன்முறையை தூண்ட 1.25 கோடி ஹனிபிரீத் சிங் செலவிட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

பஞ்சகுலா:

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபலமான ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

குர்மீத் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 36 பேர் பலியாகினர். அரியானாவில் பல இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட 524 ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.  

இந்த வன்முறை தொடர்பான வழக்கில் சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 3-ம் தேதி அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சாமியாரின் கார் டிரைவர் ராகேஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கலவரத்தை தூண்ட ஹனிபிரீத் பணம் செலவு செய்தது தெரியவந்துள்ளது. வன்முறையை தூண்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தேரா சச்சா அமைப்பின் பஞ்சகுலா கிளைத் தலைவர் சம்கவுர் சிங்கிடம் ரூ.1.25 கோடி பணத்தை ஹனிபிரீத் கொடுத்ததாக விசாரணையின்போது ராகேஷ் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகேஷ் குமார் தற்போது சிறப்பு விசாரணைக் குழுவின் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார்.