செய்திகள்

குலசேகரம் அருகே வீடு புகுந்து ரூ.35 ஆயிரம் பணம், ஆவணங்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

குலசேகரம் அருகே வீடு புகுந்து ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

குலசேகரம்:

குலசேகரத்தை அடுத்த அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்தவர் ஏசுபாலன் (வயது 47). இவரது தாயார் மரிய நேசம் (71). இவர்கள் இருவரும்  ஒரு வழக்கு தொடர்பாக நேற்று நாகர்கோவில்  கோர்ட்டுக்கு சென்றனர்.  அங்கு விசாரணை முடிந்து இருவரும் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது.

பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.35 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருந்தன. ஏசுபாலன் மற்றும் மரிய நேசம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என ஏசுபாலன் கருதினார்.

இது பற்றி அவர் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.