அஞ்சலி செலுத்தும் அமித்ஷா 
செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார்.  இதையடுத்து அவரது உடல், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அருண் ஜெட்லி உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த அவரது உடல் இன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மரியாதை செலுத்த நாளை வைக்கப்படும் எனவும், அதன்பின் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு பாஜக தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.