சசிகுமார் 
செய்திகள்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் இந்த வழக்கில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

கோவை:

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்(வயது 38) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கோவையில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இவ்வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் எந்த துப்பும் கிடைக்காததால் ஒரு வாரத்திலேயே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி.-யின் சிறப்பு புலனாய்வு பிரிவு உயரதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் கோவை சாய் பாபாகாலனியை சேர்ந்த சதாம் உசேன்(27), உக்கடத்தை சேர்ந்த சுபைர்(33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (37) என்பவர் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கணபதி பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்குக்கு பழிக்கு பழியாக சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்ததாக கூறினார்.

கொலை நடந்த மறுநாள் முதலே முபாரக், சதாம் உசேன் ஆகியோர் தலைமறைவான நிலையில் பல மாதங்களுக்கு பிறகே கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்-யார்? சசிகுமார் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? இந்த கொலையின் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு மாற்றப்பட்டது. கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், சசிகுமார் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விபரங்கள் மற்றும் ஆவணங்களை பெறுவதற்காக என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவை வந்துள்ளனர். அவர்களிடம் வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைக்கிறார்கள்.

அதனடிப்படையில் அவர் கோவையில் விசாரணையை நடத்த உள்ளனர். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக், சதாம்உசேன், சுபைர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது. #Tamilnews