கோவை:
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சதாம் (வயது 27) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
அவரை கடந்த 4-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சசிகுமாரை வெட்டிய கும்பலுடன் மோட்டார் சைக்கிளில் மட்டும் சென்றேன் என சதாம் கூறி உள்ளார். சசிகுமார் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சசி குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் முபாரக் எங்கு பதுங்கி உள்ளார்? அவருடன் வந்த மேலும் 2 பேர் யார்-யார்? என சதாமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையில் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து சதாமிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். முபாரக் தான் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாகவும், அவருடன் வந்த 2 பேர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று சதாம் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
முபாரக் கைது செய்யப்பட்டால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கெங்கு வாங்கப்பட்டது? அவை எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்றும் சதாமிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை நடந்த உடனேயே நாங்கள் அனைவரும் தனித்தனியே பிரிந்து சென்று விட்டதால் எனக்கு வேறு எதுவும் தெரியாது என சதாம் கூறி வருகிறாராம். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை மறுநாள் (9-ந் தேதி) சதாம் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.