இமாச்சல பிரதேச மாநிலத்தில் வீரபத்ரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 68 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநிலம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1977-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. 1990-ல் பா.ஜ.க., 1993-ல் காங்கிரஸ், 1998-ல் பா.ஜ.க., 2003-ல் காங்கிரஸ், 2007-ல் பா.ஜ.க., 2012-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தன.
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி வீரபத்ரசிங்கை மீண்டும் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சி பிரேம்குமார் துமலை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து, இந்த முறை ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தீவிர களப்பணியாற்றியது.
இன்று காலை 8 மணி முதல் அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். நண்பகல் 12 மணி நிலவரப்படி, 28.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2 மணி நிலவரப்படி 54.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
முதல் மந்திரி வீரபத்ரசிங், சிம்லாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மகன் விக்ரமாதித்யாவும் வாக்களித்தார். பின்னர் பேட்டி அளித்த வீரபத்ர சிங், காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்றும், அடுத்தும் காங்கிரஸ் ஆட்சிதான் என்றும் கூறினார்.