செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு: 8 வாரத்துக்குள் அரசு விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஜெனரல் 8 வாரத்திற்குள் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஐக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செந்தில்குமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நெடுஞ்சாலைத்துறையில் எல்லா ஒப்பந்த பணிகளும் ஒருசிலருக்கே வழங்கப்படுகின்றன. அந்த நபர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து பல்வேறு மோசடிகளை செய்கின்றனர். இதனால் என்னைப் போன்ற ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் ஒப்பந்தபுள்ளிகளை போட்டு, அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சட்டப்படி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, ‘மனுதாரரின் புகார் மனுவை மாநில நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஜெனரல் 8 வாரத்திற்குள் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews