செய்திகள்

சேலம் சதீஷ்குமார் மர்ம மரணம்: தடகள வீரர் மாரியப்பன் பெயரை வழக்கில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலத்தில் வாலிபர் சதீஷ்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில், தடகள வீரர் மாரியப்பன் பெயரை வழக்கில் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சதீஷ்குமார்.

இவர் கடந்த ஜூலை மாதம் வேலைக்கு பைக்கில் சென்றார். அப்போது மண் சறுக்கியதில் பைக்குடன் முன்னால் சென்ற கார் மீது விழுந்தார். அது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனின் காராகும். இந்த விபத்தில் காரின் பின்பக்க கதவில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாரியப்பன் தனது நண்பர்களுடன் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கடுத்த சில தினங்களில் சதீஷ்குமாரின் உடல் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சதீஷ்குமாரின் தாயார் முனியம்மாள் போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மர்ம மரணம் தொடர்பாக பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும். மாரியப்பனை குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.