செய்திகள்

ஜெயலலிதா மரணம்: வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஜெயலலிதாவின் மரணத்தை, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 5ந் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ ஆஸ்பத்திரியும், தமிழக அரசும் அறிவித்தது. ஆனால், அவரது சாவில் பல மர்மங்கள் உள்ளன. சந்தேகமும் உள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே, ஜெயலலிதாவின் சாவு குறித்து மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால், அந்த ஆணையத்தை மனுதாரர் அணுகலாமே? அதை செய்யாமல், இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, இந்த ஐகோர்ட்டின் பொன்னான நேரத்தை ஏன் வீண் அடிக்க வேண்டும். இதற்காக மனுதாரருக்கு அபராதம் ஏன் விதிக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்.