சென்னை:
சுதந்திர போராட்ட வீரர்கள் முன்பு நாட்டின் விடுதலைக்காக போராடினார்கள். இப்போது, தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடுகின்றனர். தியாகிகளுக்கு, ஓய்வூதியம் வழங்குவதில் அரசு அதிகாரிகள் காட்டும் மெத்தனத்தால் கடந்த 10 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஓய்வூதியத்தை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த வரிசையில் சென்னையை சேர்ந்த காந்தி என்ற சுதந்திர போராட்ட தியாகிக்கு, ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் காந்தி (வயது 89). இவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். பர்மாவில் அவர் கைது செய்யப்பட்டு 1945-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்பின்னர் 1980-ம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியம் கேட்டு சென்னை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்தார். 37 ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியம் எதுவும் கிடைக்காதால், கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார்.
அப்போது சென்னை கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மனுதாரரின் வயது தொடர்பான விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பத்தில் உள்ள வயது வெவ்வேறு விதமாக இருந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டும், அவர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு தியாகி ஓய்வூதியத்தை வழங்க முடியவில்லை’ என்று கூறியிருந்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் பர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று அவருடன் சிறையில் இருந்தவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதில் லட்சுமி ஷெகல் என்ற கேப்டன் லட்சுமி என்பவரும் ஒருவர். கேப்டன் லட்சுமி 1914-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். அவரது தந்தை எஸ்.சாமிநாதன் இந்த ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியவர்.
மருத்துவ படிப்பை முடித்த கேப்டன் லட்சுமி, நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். ஜான்சிராணி என்ற படைப்பிரிவை நேதாஜி தொடங்கியபோது, அந்த மகளிர் படை பிரிவுக்கு லட்சுமி தான் தலைமை தாங்கினார். அப்படிப்பட்ட பெண்மணி கொடுத்த சான்றிதழை அதிகாரிகள் ஏற்கவில்லை.
அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசு கழகத்தின் தலைவர் கே.குருமூர்த்தி மற்றும் மனுதாரருடன் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டிருந்தவர்கள் சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர். இதையும் அரசு அதிகாரிகள் ஏற்கவில்லை.
அவரது வயதில் பிரச்சினை என்று ஒரு காரணத்தை கூறி, ஓய்வூதியத்தை வழங்க மறுத்துள்ளதை ஏற்க முடியாது. அதிகாரிகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காக இப்படி ஒரு காரணத்தை கூறியுள்ளது துரதிருஷ்டவசமானது.
எனவே, மனுதாரருக்கு 2 வாரத்துக்குள் தியாகி ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். அவரது வீட்டுக்கு அதிகாரிகள் நேரில் சென்று வழங்கவேண்டும். ஓய்வூதியம் கேட்டு 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் விண்ணப்பித்துள்ளார். அன்று முதல் அவருக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு 4 வாரத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய மனுதாரர், இதுபோன்ற அதிகாரிகளின் கையில் சிக்கி அவதிப்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். #tamilnews