இலவச சேலை, வேட்டி 
செய்திகள்

இலவச சேலை, வேட்டிக்கு தரம் குறைந்த நூல் கொள்முதல் - விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

இலவச சேலை, வேட்டிக்கு கொள்முதல் செய்யப்படும் நூல் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

வேட்டி, சேலை நெய்வதற்கு நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.

இதில் ஒரு சேலைக்கு, ரூ.260 கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், ரூ.21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதால் அவை அடிக்கடி அறுந்து விடுகிறது. இதனால் ஒரு நாளைக்கு 3 சேலைகள் மட்டுமே நெய்யப்படுகிறது. நெசவாளர்களின் தொழிலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.