சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், பஞ்சாப் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எங்களது அமைப்பு சார்பில் பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 4 கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்கும் வகையில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு பிரிவுக்கு அதிகபட்சமாக 30 மாணவர்களும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அதிகபட்சமாக ஒரு பிரிவுக்கு 35 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும். ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 5 பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் 2013-ம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான இயக்குனரகம் 2 சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த சட்டத்தில் அதிகபட்ச மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த விதிமுறைகளும் இல்லை. எனவே, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்ட 2 சுற்றறிக்கைகளையும் ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்தின் சுற்றறிக்கைகளை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
மேலும், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தைப் பின்பற்றி 8 வாரங்களுக்குள் புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.