செய்திகள்

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையை சேர்ந்த சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து 2013ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மனித கழிவுகளை அகற்றிய போது 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் நகர்புறங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் 363 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறுவது காகித அளவில் மட்டுமே இருக்கிறது. அந்த சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

எனவே மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த பணியில் ஈடுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் ஆகும். இதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணை வருகிற ஆகஸ்டு 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.