செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- ஐகோர்ட்டு

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும் என திருப்பூர் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt

சென்னை:

வங்காளதேசத்தை சேர்ந்த முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர், எந்த ஒரு முறையான அனுமதியும் இல்லாமல், திருப்பூரில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர். 6 பேரும் சட்டவிரோதமாக இந்தியாவில் வசிப்பதால், வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்தனர்.

இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் எம்.சோமசுந்தரம் ஆஜராகிவாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களை கைது செய்துள்ள போலீசார், இதுகுறித்து குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, இவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.

இவர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரணை நீதிமன்றம் விசாரித்து, அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கத்தான் தீர்ப்பளிக்கப் போகிறது.

எனவே, இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை. இந்த 6 பேரையும் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க தகுந்த நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். #HighCourt