செய்திகள்

கந்து வட்டி தடை சட்டம்: நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படுமா?- ஐகோர்ட்டு

கந்து வட்டி தடை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படுமா? என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை:

ஐராவதநல்லூரைச் சேர்ந்த கனகவேல்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்க சில வருடங்களுக்கு முன்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறுதிப்படுத்தி உள்ளது.

எனவே கந்து வட்டி தடைச்சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் வருகிற டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.