செய்திகள்

பெல் நிறுவனத்தின் ரூ.2000 கோடி டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்பிலான டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.

மாலை மலர்

திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் சார்பில், ரூ.2000 கோடி மதிப்பில் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொடர்பாக டெண்டர் விடப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இந்நிலையில், துவாக்குடியைச் சேர்ந்த சிறு,  குறு தொழிற்சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், ‘பெல் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்போது நாக்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 20 சதவீதம் அளவுக்கு குறைத்து பெல் நிறுவனத்திடம் டெண்டர் கேட்டிருக்கிறது. இதன்மூலம் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும்’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், பெல் நிறுவனத்தின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தது. டெண்டர் விதிமுறைகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு எதிராக உள்ளது என்றும் தெரிவித்தது.