செய்திகள்

திருச்சியில் டிடிவி தினகரன் அணி சார்பில் 19-ம் தேதி பொதுக்கூட்டம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் வரும் 19-ம் தேதி டிடிவி தினகரன் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் கடந்த 12-ம் தேதி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, போராட்டத்தை ரத்து செய்வதாக தினகரன் அறிவித்தார்.

இதையடுத்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் 16-ம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப்படும் என தினகரன் அறிவித்தார். இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துள்ளது. 16-ம் தேதி வேறு ஒருவருக்கு அனுமதி தந்துள்ளதால், தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தர இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, திருச்சியில் செப்டம்பர் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுக்கூட்ட அறிவிப்பை டிடிவி தினகரன் முறைப்படி அறிவித்தார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாத்து சமூக நீதியை நிலைநாட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அ.தி.மு.க. (அம்மா) சார்பில் 16-9-2017 அன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற அனுமதிப்படி இப்பொதுக்கூட்டம் 19-9-2017 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளேன்.