செய்திகள்

கோவிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த கடும் கட்டுப்பாடுகள்- தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கோவில்களில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த போதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. #HCMaduraiBench

மாலை மலர்

தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது முற்றிலும் விதிமீறலாகும்.

கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனியார் தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அனுமதியின்றி செயல்பட்ட வாழும் கலை அமைப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.

இது குறித்து நாளை (இன்று) ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர், தஞ்சை பெரிய கோவில் தேவஸ்தான இணை ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கோவில் உதவி கமி‌ஷனர் பரணிதரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் எந்த அடிப்படையில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.