செய்திகள்

கந்து வட்டி மீது கடும் நடவடிக்கை: ஐகோர்ட்டு நீதிபதிகள் தகவல்

கந்து வட்டி விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சென்னை:

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக வக்கீல் சூரிய பிரகாசம் இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுந்தரேஷ், எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, 2014ம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல் அமர்வு, கந்து வட்டி விவகாரத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு ஈடான அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்க வேண்டும், கந்து வட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் இந்த உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்படவில்லை, எனவே கந்து வட்டியை தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த கோரி வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் அறியும், எனவே திங்கட்கிழமை வரை பொறுத்திருங்கள், சில கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT