சென்னை:
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காதர்பாஷா உள்ளிட்ட சில போலீஸ்காரர்கள், பழங்கால சாமி சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த சிலை கடத்தல் சம்பவம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோல சாமி சிலைகள் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட வேண்டும். இந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரிக்க வேண்டும். இதற்காக இந்த கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவிக்கிறேன்’ என்றும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த உத்தரவில் சில சந்தேகங்கள் உள்ளதாகவும், அதை விளக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை பிறப்பித்த நீதிபதி மகாதேவன் தற்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இதனால், அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலம் இன்று இந்த வழக்கை விசாரித்தார் நீதிபதி மகாதேவன்.
அப்போது, ‘சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அரசு தனியாக குழு அமைக்க வேண்டாம். சிறப்பு அதிகாரியாக ஏற்கனவே பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளதால், விரைந்து நடவடிக்கை தேவை. சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சிறப்பு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். புதிய, பழைய வழக்குகள் அனைத்தையும் அனுப்ப வேண்டும். அரசு குற்றம்சாட்டும் நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். செப்டம்பர் 4-ம் தேதி தாக்கல் செய்யப்படும் அறிக்கையைப் பொருத்து அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றார் நீதிபதி.