செய்திகள்

வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது அவசியம்: ஐகோர்ட்டு கருத்து

வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகனம் ஓட்டுனர் அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி, டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்தார்.

அப்போது, ‘வாடகைக்காக வாகனத்தை ஓட்டுபவர்கள், தங்களது ஓட்டுனர் உரிமத்தை, வாகன உரிமையாளரிடம் கொடுத்து விடுவது வழக்கம். எனவே, அவர்களால் அசல் உரிமத்தை வைத்திருக்க இயலாது.

அசல் ஓட்டுனர் உரிமம் திடீரென தொலைந்து விட்டால், புதியதை வாங்குவதற்கும் கால தாமதம் ஏற்படும். அதுவரை சம்பந்தப்பட்ட நபர் வாகனங்களை ஓட்ட முடியாத நிலை ஏற்படும்.

எனவே, இந்த விவகாரத்தில் இந்த ஐகோர்ட்டு தலையிட்டு, தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’ என்று டிராபிக் ராமசாமி கூறினார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘இந்த விவகாரத்தில், தற்போது எந்த ஒரு உத்தரவையும் இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க முடியாது. தமிழக அரசின் உத்தரவில் தலையிடவும் முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர். மேலும், வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.