சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘அக்பர்’ என்ற நீராவி ரெயில் எஞ்ஜின் ஓட்டுநர் இல்லாமல் 2 கி.மீ. தூரம் ஓடி தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
அரியானா மாநிலத்தில் அக்பர் என பெயரிடப்பட்ட 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரெயில் எஞ்சின் ஒன்று உள்ளது. இந்த எஞ்சின் 20க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அரியானா மாநிலம் ரெவாரி பகுதியில் அந்த ரெயில் எஞ்சினின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது அந்த ரெயில் எஞ்சினின் பிரேக் லிவர் பழுதடைந்தது. இதையடுத்து அந்த எஞ்சினில் இருந்த இரண்டு ஓட்டுநர்களும் உயிர் தப்புவதற்காக கீழே குதித்தனர்.
ஓட்டுநர்கள் இல்லாமல் சென்ற அந்த ரெயில் எஞ்சின் தொடர்ந்து 2 கி.மீ தூரம் சென்ற பின்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எஞ்ஜினுடன் பயணிகள் பெட்டி ஏதும் இணைக்கபடாததாலும், எதிர் திசையில் எந்த ஒரு ரெயிலும் வராததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த 10-ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் ஒரு ரெயில் எஞ்ஜின் ஓட்டுநர் இல்லாமல் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.