செய்திகள்

அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை கருத்து: மக்களவையில் மன்னிப்பு கேட்டார் மத்திய மந்திரி

அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பிண்மை வார்த்தை குறித்து சர்ச்சை கருத்து கூறிய மத்திய மந்திரி அனந்த் குமார் ஹெக்டே மக்களவையில் இன்று தன்னுடைய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டார். #WinterSession

மாலை மலர்

புதுடெல்லி:

கர்நாடக மாநிலம் குகானூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அனந்த்குமார் ஹெக்டே, மக்கள் தங்களை தங்களின் மத அடையாளத்தோடு பெருமையோடு அழைத்துக் கொள்ள வேண்டும். தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த அடையாளமே தெரியவில்லை என்று பேசினார்.

மேலும், அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனம் பல முறை மாற்றப்பட்டிருக்கிறது என்றார். மதசார்பற்ற என்ற வார்த்தையும் மாற்றப்படும் என்றும் அதை மாற்றுவதற்காகவே தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மந்திரியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. நான்கு நாள் விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மந்திரியின் பேச்சால் முடங்கின.

இந்நிலையில், தனது பேச்சுக்கு அவர் மக்களவையில் இன்று மன்னிப்பு கேட்டார். அரசியல் சாசனம், பாராளுமன்றம், அம்பேத்கர் மீது எனக்கு மரியாதை உள்ளது. நான் அவற்றை சிறப்பானதாகவே கருதுகிறேன். ஒரு குடிமகனாக அதன் மீது நான் எந்த கேள்வியும் எழுப்ப மாட்டேன் என்று கூறினார்.

ஆனால், மந்திரியின் விளக்கத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். இதனையடுத்து, எழுந்த மந்திரி, தனது பேச்சால் யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதனையடுத்து, அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடந்தது. #WinterSession