கழிவுநீர் வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து ஆறாக ஓடிய காட்சி. 
செய்திகள்

சேத்தூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

சேத்தூர் பகுதியில் நேற்று பகல் 2 மணிக்கு பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

மாலை மலர்

தளவாய்புரம்:

சேத்தூர், முகவூர், செட்டியார்பட்டி, தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் நேற்று பகல் 2 மணிக்கு பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன்பின்னரும் தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது. தளவாய்புரம் பால் டிப்போ தெருவில் உள்ள கழிவு நீர் வாருகால் மற்றும் செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிறுத்தத்தில் உள்ள கழிவுநீர் வாருகாலில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதேபோல் வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், குகன்பாறை, சிப்பிப்பாறை, தாயில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. குகன்பாறை அருகே உள்ள தரைப்பாலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழைநீர் சென்றது. விஜயகரிசல்குளத்தில் கழிவுநீர் வாருகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சென்றதால் மக்கள் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் தங்கவேலு அடைப்புகளை சரி செய்தார்.

ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளான கரிசல்குளம், காளவாசல், கீழராஜகுலராமன், தொம்பக்குளம், கெஸீங்கன் குளம், வலையபட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. டி.என்.சி.முக்கு ரோட்டில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கும் குட்டைகள் நிரம்பி உள்ளன.