பயிர் நீரில் மூழ்கிய வயலிலிருந்து பெண்மணி ஒருவர் தண்ணீரை வடிய வைப்பதை காணலாம் 
செய்திகள்

மன்னார்குடியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன

மன்னார்குடியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மாலை மலர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேலவாசல், காரிகோட்டை, மூவாநல்லூர், பருத்திக்கொட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு, பாமணி, கர்ணாவூர், கானூர்பருத்திக்கோட்டை ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர்.

குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் தற்போது தான் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர் முற்றிலும் சாய்ந்துவிட்டன. இதனால் பெரும்பாலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டது.

இதனால் குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

தற்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன. தண்ணீரில் மூழ்கிய நிலையில் தற்போது நெற்பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் நன்றாக விளைச்சல் இருந்தும் அதன் பலனை அனுபவிக்க முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். எனவே விவசாயிகளின் நிலையை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.