திருச்சியில் பெய்த சாரல் மழையால் வாகனங்கள் மின் விளக்குகளை ஒளிர விட்டு செல்வதை படத்தில் காணலாம் 
செய்திகள்

திருச்சியில் 2-வது நாளாக பலத்த மழை

திருச்சியில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

திருச்சி:

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பகல் முழுவதும் பகலில் கடுமையாக வெயில் அடித்து வருகிறது இரவு வேளையில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருச்சி மாநகரில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து. இரவு 7.15 மணி முதல் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டிருந்தது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மேலும் சாலையோரங்களில் இரவு வேளையில் தள்ளுவண்டி மூலம் டிபன் கடை நடத்தியவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வெளியூர் செல்லும் பஸ் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். இதுபோல திருச்சி மாநகரில் கிராப்பட்டி- எடமலைப்பட்டி புதூர் இணைக்கும் ரெயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. திருச்சி பாலக்கரை, சத்திரம் பஸ் நிலையம், தில்லைநகர், கே.கே நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. சில இடங்களில் சாக்கடை கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து அடைப்பு காரணமாக சாலையில் ஓடியது.

மணப்பாறை பஸ் நிலையம் முன்பு நேற்று பெய்த மழை நீர் குளம் போல் தேங்கியது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது. இதுமட்டுமின்றி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை டிரைவர்கள் வேறு இடத்திற்கு எடுத்து சென்றனர். இதுமட்டுமின்றி மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குளம் போல் தேங்கி இருந்ததோடு அதை மக்கள் கடந்து செல்லும்போது தொற்று ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- வாத்தலை அணைக்கட்டு 136.80, சமயபுரம் 78, முசிறி 60, நவலூர் குட்டப்பட்டு 33.80, பொன்னணியாறு அணை 11.20, துறையூர் 16, திருச்சி டவுன் 9.90, திருச்சி ஜங்ஷன் 8, பொன்மலை 5.80, புலிவலம் 5, சிறுகுடி 3, மொத்தம். 403.90, சராசரி 16.16.

SCROLL FOR NEXT