வேலூர்:
வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்தது ஆறுதலாக அமைந்தது.
வேலூரில் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தொடர்ந்து தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிவந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல்நாளிலேயே 105 டிகிரி வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பகல்நேரங்களில் அனல்காற்று வீசியது. வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் தங்கள் முகத்தை மூடியபடி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல காலையிலேயே வெயில் கொளுத்த தொடங்கியது. தொடர்ந்து மாலை வரை வெயில் அடித்தது. நேற்று 106.2 டிகிரி வெயில் பதிவானது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திடீரென புழுதியுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இந்த காற்றால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மற்றும் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் காற்றில் விழுந்தன. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை நீடித்த நிலையில் இரவு 8 மணி அளவில் வேலூர் சேண்பாக்கம் கழனிகாட்டு தெருவில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 15 அடி உயர தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் தென்னை மரம் எரிய தொடங்கியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதற்கிடையே வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீரர்கள் செல்லும் முன்பே மரம் அகற்றப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில் மழை நின்றது. சுமார் 1¾ மணி நேரம் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.
கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மழை பெய்தது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் பகுதியிலும் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே ஆலங்கட்டிகள் விழுந்ததால் சிறுவர்கள் அதனை கையில் எடுத்து விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் ஏற்கனவே கழிவுநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் ஓடிய நிலையில், தற்போது பெய்த மழையால் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் ஓடியது. பள்ளமான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு தலுக்கன்வட்டத்தில் வடிவேல் (வயது 50) என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். மின்னல் தாக்கியதில் அந்த 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தது.
ஆரணியில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதனால் பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. அப்போது சூறாவளி காற்றும் சுழன்றடித்தது.
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தபோது கருணாகரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் மின்னல் தாக்கியது. இதில் 3 பசுமாடுகள் பலியாகின.