நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்கிறது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 93.10 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 2 அடி உயர்ந்து 95.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,824 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 304.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று 107.41 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 109.61 அடியாக உயர்ந்தது. நேற்று 73.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று 75.80 அடியாக அதிகரித்தது.
இதே போல் நேற்று 72.50 அடியாக இருந்த கடனாநதி அணை நீர்மட்டம் 74.20 அடியாகவும், 64.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் 65.5 அடியாகவும், 64.31 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாகவும், 21 அடியாக இருந்த வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 23 அடியாகவும் உயர்ந்தது.
குண்டாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணைகள் நிரம்பி வழிகின்றது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.95 அடி உள்ளது.
தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றிரவு முதல் அம்பை, சங்கரன்கோவில், சிவகிரி, நாங்குநேரி, ராதாபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அம்பையில் 47.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் 4-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவியில் 6-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதாலும், கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை-தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது 95.65 அடி நீர்மட்டத்துடன் காணப்படும் பாபநாசம் அணை ஓரிரு நாட்களில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணை தற்போது 100 அடியை நெருங்க உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்பை-47.8, சங்கரன் கோவில்-42, பாபநாசம்-41, சேர்வலாறு-37, கருப்பாநதி -31, ராமநதி-30, சிவகிரி-29, குண்டாறு-28, செங்கோட்டை, நாங்குநேரி-26, ராதாபுரம்-21, ஆய்க்குடி-22, தென்காசி-15.8, சேரன்மகாதேவி-14.4, நம்பியாறு-13, மணி முத்தாறு-10.8, நெல்லை -7.4, பாளை-7.