செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, தென்காசி பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, தென்காசி பகுதிகளில் கனமழை பெய்தது. குற்றாலத்தில் பெய்த மழையினால் நேற்றிரவு அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கனமழை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.55 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,356 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 918 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 111.61 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி உயரம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் இந்த அணை நீர்மட்டம் 81.20 அடியானது. இந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீரே தேவை. தற்போது வினாடிக்கு 201 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராமநதி அணை நீர்மட்டம் 65.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.81 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 27.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 20.34 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 92.25 அடியாகவும் உள்ளன.

இதனிடையே நெல்லை மாவட்டத்தில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது. நெல்லை, பாளை உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளிலுமே ஓரளவு தண்ணீர் நிரம்பி உள்ளதால் கனமழையினால் தண்ணீர் கூடுதலாக வரும் பட்சத்தில் அவற்றை ஆறுகளில் திறந்து விடவும் அதற்காக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அணை பகுதிகளில் பொதுப்பணி துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களிலும் பலத்த மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.