செய்திகள்

பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு: மெயினருவி - ஐந்தருவியில் குளிக்க 2-வது நாளாக தடை

குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தென்காசி:

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும் சாரல் மழையுடன் குளுகுளு சீசன் நிலவும். இந்த ஆண்டு குற்றால சீசன் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கியது.

அதிலிருந்து 2 வாரம் சீசன் ஓரளவு நன்றாக இருந்தது. 3-வது வாரம் சாரல் மறைந்து வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக குற்றால மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அவ்வப்போது சாரல் மழையும் பெய்து ரம்மியமான சூழல் நிலவி வருவதால் குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ளது. நேற்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்தது.

ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் தடை நீக்கப்பட்டு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று ரம்ஜான் விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பழைய குற்றாலத்தில் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அங்கு குறைவாக இருந்தது.

இந்நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டியதை தொடர்ந்து, போலீசார் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் பழைய குற்றாலம், புலியருவியில் தண்ணீர் மிதமாக விழுவதை கேள்விப்பட்டு சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்தனர்.

சுமார் 1 மணி நேரத்தில் மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனனல் அந்த அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அருவிக்கரைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழைய குற்றாலம், புலியருவி யில் மிதமாக அளவில் தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுவதை படத்தில் காணலாம்.