செய்திகள்

புயல் சின்னத்தால் குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை - 300 மீனவர்கள் கடலில் தவிப்பு

புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் கன்னியா குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

மாலை மலர்

தெற்கு இலங்கைக்கும், கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவுக்கும் இடையே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது. இது, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடலில் மினிகாய் தீவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்தில் இருந்து 330 கி.மீட்டர் தொலைவிலும் மாலத்தீவு அருகே மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் சின்னம் மேலும் தீவிரம் அடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்திலும், கேரளா, லட்சத் தீவிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் சின்னம் தீவிரமாக நேற்று முதல் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரியில் இரவு 10 மணி அளவில் இடி- மின்னல், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. மயிலாடியில் அதிகபட்சமாக 3.5 செ.மீ. அளவிற்கு மழை பெய்தது. ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தோவாளை, கன்னிமார், திருவட்டார், குலசேகரம், கோதையாறு பகுதிகளிலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

குமரி கடல் பகுதியில் பலத்த கொந்தளிப்பும் ஏற்பட்டது. அலைகள் பனைமர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. இதனால் கடலோர கிராமங்களில் மீனவர்கள் பீதிக்கு ஆளானார்கள்.

கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை 2 மாவட்டங்களிலும் கன மழை பெய்தது.

தூத்துக்குடியில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையும் தூத்துக்குடியில் மழை விட்டு, விட்டு பெய்தது. நள்ளிரவில் பெய்த கனமழையால் திரேஸ்புரம் பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு மரக் கடைக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. ஆரோக்கியபுரம், கோவில்பிள்ளை நகர், பழைய மாநகராட்சி முன்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுண், பேட்டை, பாளை பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

சிந்துபூந்துறையில் நள்ளிரவில் பெய்த கன மழையால் 4 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. பாளை மகாராஜ நகரில் பழமையான வாகை மரம் இன்று அதிகாலை சாய்ந்தது.

பேட்டை நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பெய்த கனமழையால் பேட்டை முனிசிபல் பஸ் நிறுத்தம் செக்கடி பஸ் நிறுத்தம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள சாலை சேறும் சகதியுமாக மாறி முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது.

பாவூர்சத்திரம் பகுதியில் பெய்த கனமழையால் அவ்வை அரசு பெண்கள் பள்ளியை மழைநீர் சூழ்ந்தது. தேர்வு எழுத சென்ற மாணவிகள் சிரமத்துடன் தண்ணீரை கடந்து பள்ளிக்கு சென்றனர்.

களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது.

சூறை காற்று வீசியதில் ஜவஹர் வீதி சாலையில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு வழக்கம்போல் நடைபெறும். எனவே தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் வழக்கம்போல் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி துறை முகத்தில் 3-ம் புயல் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 3-வது நாளாக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல்லவில்லை.

நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 600-க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றிருந்தனர். இதில் 15 படகுகளுக்கு புயல் பற்றிய தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து அந்த படகுகள் லட்சத்தீவு, கோவா, கர்நாடகாவின் கார்வார் துறைமுகங்களில் கரை ஒதுங்கின.

இன்னும் 35-க்கும் மேற்பட்ட படகுகள் கரை ஒதுங்கிய தகவல் கிடைக்கவில்லை. இந்த படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். அவர்கள் கடலில் வீசிய சூறைக்காற்றில் சிக்கிக் கொண்டனரா? என்று தெரியவில்லை.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியபோதும் இதுபோல ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள்தான் புயலில் சிக்கி மாயமானார்கள். இவர்களில் இன்னும் 150-க்கும் மேற்பட்டோர் பற்றிய தகவல் தெரியவில்லை.