மேலசொக்கநாதபுரம்:
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு பிறகு இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் போடி மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் போதிய மழை இல்லை. அவ்வப்போது மழை வருவதுபோல மேகங்கள் கூடினாலும் சாரலுடன் நின்றுவிடும்.
நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்து வந்தநிலையில் மாலையில் மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. லேசான சாரலுடன் இரவு 7 மணிக்கு மழை பெய்தது. பின்னர் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழையாக பெய்தது.
இதனை சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆனந்தமாக கண்டு ரசித்தனர். போடியில் பல வருடங்களுக்கு முன்புதான் இதுபோன்ற மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையினால் நகர்முழுவதும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. போடி நகராட்சி பகுதி முழுவதும் பாதாளசாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணிகள் அரைகுறையாக நிறைவு பெற்றுள்ளதால் கனமழைக்கு சேதமடைந்தது. குரங்கணி செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு 3 வேன்கள் அடுத்தடுத்து பாதாளசாக்கடை குழிக்குள் சிக்கிகொண்டது.
உடனடியாக வேனை வெளியே எடுக்க முடியவில்லை. மழை நின்றபிறகு தான் எடுக்க முடிந்தது. இதனால் அரசு ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில்லமரத்துப்பட்டியில் வசித்து வரும் விவசாய கூலித் தொழிலாளி பாலு(வயது50) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பாலு, அவரது மனைவி பொட்டியம்மாள் படுகாயமடைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொட்டியம்மாள் நிலைமை மேலும் மோசமடையவே தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போடி, தேவாரம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் கொட்டிதீர்த்த இந்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.